Wednesday, January 19, 2005

செல்லினம் செய்த சேவை...


செல்லினச் செயலி கடந்த சனிக்கிழமை வெளிவந்தது முதல், ஒவ்வொரு நாளும் அதனைப் பயன் படுத்தும் சில பயனாளர் நண்பர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் அனுபவங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கில் மூன்று ஒன்று கூடும் நிகழ்ச்சிகளை வெவ்வேறு இடங்களில் நடத்தினோம்.

முற்றிலும் புதிய நண்பர்கள். புதியத் தேவைகள். புதிய அனுபவங்கள். ஆங்கிலத்தில் இதைக் கூறினால் "a completely different demography" என்று கூறுவேன்.

நேற்று சந்தித்த ஒரு பயனாளர் - உண்மையிலேயே செல்லினத்தின் பிரவி பலனை உணரச் செய்துவிட்டார்:

அவர் தமிழகத்தில் இருந்து வந்தவர். சிங்கையில் காண்ட்ரெக்ட் வேலை செய்கிறார். இரவு 7.00 மணி சந்திப்புக் கூட்டத்திற்கு 5.30க்கெல்லாம் வந்துவிட்டார். 6.45 மணிக்கு நான் வந்து சேர்ந்ததும் உடனே அவர் புதிதாக வாங்கிய Samsung C200 செல் பேசியைத் தந்து "இதில் தமிழ் எஸ் எம் எஸ் போட்டுக்கொடுங்க.." என்று கேட்டுவிட்டு, நான் அதை நோண்டிப் பார்ப்பதற்குள் தமது மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

கேட்டுக்கொண்டே செல்பேசியை நோண்டிக்கொண்டிருந்தேன்.

"என் மனைவி ஊர்ல இருக்கா. அவளுக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாதுங்க தமிழ் மட்டும்தான் ...." என்று சொன்னது கூட என்னை அவ்வளவாகப் பாதிக்கவில்லை.

"ஆங்கிலம் தெரியாட்டினா என்ன...இப்பதான் அடிக்கடி போன் பன்றதுக்கு வாய்ப்பிருக்கே? எத்தனை வகைச் சலுகை அட்டைகள். நலம் விசாரிக்கக் கடிதம் எழுதிக் காத்திருக்க வேண்டியதில்லையே. பசியாறும் நேரம், மதிய உணவு, இரவு உணவு -- ஒவ்வொரு நேரத்திலும் அழைத்து 'சாப்பிட்டியா'ன்னு' கேட்கலாமே.." என்ற வேடிக்கையாகக் கூறிக்கொண்டு அவர் செல்பேசியில் WAP/GPRS செட்டிங்-கை பெற்றுக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு வரி என்னை அப்படியே உட்கார வைத்தது:

"அவளுக்கு பேசக் கூட வராதுங்க..."

~ முத்து.

7 Comments:

Blogger Vijayakumar said...

தன் பிள்ளை நாலு பேருக்கு நன்மை செய்யும் போது தானே தாய் ஈன்ற பொழுதினும் பெரிதுவக்குகிறாள். சேவை செழிக்கட்டும் முத்து.

19 January 2005 at 11:28  
Blogger அன்பு said...

வணக்கம் முத்து,

அந்த நிகழ்ச்சியை நீங்கள் கூறியதாக படைப்பாளர் மீனாட்சி நேற்றிரவு வானொலியில் பகிர்ந்து கொண்டார்கள். கேட்ட எங்களுக்கே... அந்தசெய்தி ஒரு இன்ப அதிர்ச்சியளித்தது. உங்களுக்கு அதுபற்றி சொல்லவும் வேண்டுமோ...!?

ஆனால், தமிழ்குறுந்தகவலுக்கு மக்களை தயார்படுத்த மிகுந்த சிரமப்படவேண்டும் போல் இருக்கிறது. தொழில்நுட்பத்தை அளித்த உங்களால் மக்களின் அனைத்து ஐயங்களுக்கும் தனியொருவராக தீர்த்து வைக்க இயலாதென்றே தோன்றுகிறது. மாணவர்கள், ஆதரவாளர்கள் சிலரைத் தயார்படுத்தி சிறிதுகாலம் அவ்வப்போது Oli's M3யிலோ Planetகடைகள் மூலமாகவோ உதவிதேடி வருபவர்களுக்கு தொழில்நுட்ப உதவி செய்யவைக்கவேண்டும்.

தமிழ்குறுந்தகவல் பயன்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தவர்களை - அதன் ஆரம்பகட்ட ஓரிரு தயார்படுத்துதல்கள் செய்ய இயலாததால், அந்த முயற்சியை கைவிடப்படுத்துதல் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு என்னால் இயன்ற உதவியை செய்ய தயாராயிருக்கிறேன்.

மீண்டும் நன்றி.

19 January 2005 at 11:38  
Blogger Muthu said...

அன்பு,

உங்கள் அன்பு மொழிக்கு நன்றி. தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு இவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

தொழில்நுட்ப உதவி என்று பார்த்தால் அவ்வளவாக இல்லை - தகுந்த செல்பேசிகளை வைத்திருப்பவர்கள் உடனே செல்லினத்தைப் பெற்று தமிழில் செய்திகளை அனுப்புகிறார்கள். ஓரிரு சிக்கல்கள் இருந்தன அவற்றையும் கலைத்து விட்டோம்.

ஆனால், ஆர்வம் மிகுதியால், பழைய செல்பேசிகளை கொண்டுவந்து இதில் போட்டுக்கொடுங்கள் என்று கூறும்போதுதான் எங்களது நெஞ்சமே பாரமாகிறது. மிகுந்த தயக்கத்துடன் அவர்களிடம் "இதுல முடியாதுங்க..." என்று சொல்லும் போது....அதுவும் கண்டிப்பாக முடியாதுங்க'ன்னு சொல்லவேண்டிய கட்டய நிலையில் இருக்கும் போதுதான் இன்னும் எத்தனை பேருக்கு இதை சொல்வது என்ற வேதனை ஏற்படுகிறது.

ஒருவர் நேற்று ஒரு மிகப் பழைய செல்பேசியைக் கொண்டுவந்தார் --- விவரம் அறிந்ததும்..இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் இதிலும் செயல் படுத்தி விடுவீர்கள் - உங்களால் முடியாததா என்று வெகுளியாகச் சொல்கிறார்.

இது போன்ற விஷயங்களே அதிகம்....இந்த நிலை மாற காலம் பிடிக்கும். அதுவரை கப்பலைக் கட்டிக்காக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் வலைப்பதிவில் எழுதியது மிகவும் உதவியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

~ முத்து

19 January 2005 at 13:17  
Blogger Aruna Srinivasan said...

முத்து,

இந்தப் பதிவில் கடைசி வரிகள் எழுதியுள்ளீர்கள் பாருங்கள் - பதிவுகளின் அழகே இதுதான். ஆங்காங்கே சட்டென்று மனதைத் தொடும் சொற்கள்..... அந்த சொற்களில் இருக்கும் மனிதம்...... மனித நேயம்....

தொடர்ந்து பதியுங்கள். வாழ்த்துக்கள்.

அருணா.

19 January 2005 at 18:30  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

செல்லினத்தில் சிரமத்திற்கு உண்டான பலன் இருக்கிறதா என்று நானும் ஐயப்பட்டுக் கொண்டு இருந்தேன்... இந்த ஒரு நிகழ்ச்சி போதும். செல்லினத்தை நியாயப் படுத்த. உங்கள் தொடர்ந்த முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள் முத்து.

19 January 2005 at 23:57  
Blogger meenamuthu said...

சீக்கிரமே செல்லினம் உபயோகப் படுத்தவேண்டும்
மிக மிக ஆவலாக இருக்கிறது.

இப்படி எத்தனை பேருக்கு
எவ்வளவு உதவி 'செல்லினத்தால்!

நெகிழவைத்துவிட்டது கடைசி வரிகள்

அன்புடன்
மீனா.

20 January 2005 at 02:56  
Blogger அன்பு said...

அன்புக்குரிய முத்து,

அந்த நண்பரை சென்றவாரயிறுதியில் சந்திக்கநேர்ந்தது. அவர் செல்லினம் பற்றி நண்பர்களிடம் தெரியச்செய்வதாயும், செல்லினம் மேல்விவரம் அடங்கிய விளக்கவுரை(brochureனு சொல்ல வந்தேன்:) ஒன்றுதான் இருந்ததால் கிட்டத்தட்ட நூறு பிரதியெடுத்து கொடுத்ததாகவும் கூறி வியக்கவைத்தார்.

1 February 2005 at 17:36  

Post a Comment

<< Home